யாழ்.மாவட்டத்தில் இம்முறை உருளைக்கிழங்கு செய்கை முன்னெடுக்கப்படவில்லை – வட மாகாண விவசாய பணிப்பாளர்

Colombo (News 1st) யாழ்.மாவட்டத்தில் இம்முறை உருளைக்கிழங்கு செய்கை முன்னெடுக்கப்படவில்லை என வட மாகாண விவசாய பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் வருடாந்தம் 100 ஏக்கர் பரப்பில் உருளைக்கிழங்கு செய்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில் இம்முறை செய்கை முன்னெடுக்கப்படவில்லை என வட மாகாண விவசாய பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் வருடத்திற்கு ஒரு முறை மாத்திரம் உருளைக்கிழங்கு செய்கை முன்னெடுக்கப்படுவதுடன் கோப்பாய் பகுதியிலேயே அதிகளவில் உருளைக்கிழங்கு செய்கை முன்னெடுப்படுகின்றது.

இதன்பொருட்டு பிரான்ஸ், நெதர்லாந்து நாட்டிலிருந்தே வருடாந்தம் உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்படுவதாக சுகந்தினி செந்தில்குமரன் குறிப்பிட்டார்.

எனினும், நெதர்லாந்து நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் இம்முறை விதை உருளைக்கிழங்குகளை இறக்குமதி செய்ய முடியவில்லை என வட மாகாண விவசாய பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரன் தெரிவித்துள்ளார்.

இதனால், யாழ்.மாவட்டத்தில் இம்முறை உருளைக்கிழங்கு செய்கை முன்னெடுக்கப்படவில்லை என வட மாகாண விவசாயப் பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்னுமொரு புறத்தில் நவீன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இம்முறை யாழ்.மாவட்டத்தில் உருளைக்கிழங்கு செய்கையினை முன்னெடுப்பதற்கு 32 விவசாயிகள் தயாராக இருந்தனர்.

இதன்பொருட்டு இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகள் பக்டீரியா தொற்றுக்குள்ளானமையினால் நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் கீழும் இம்முறை உருளைக்கிழங்கு செய்கை முன்னெடுக்கப்படவில்லை என உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் செல்வச்சந்திரராஜா துஷ்யந்தன் தெரிவித்தார்.

நவீன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உருளைக்கிழங்கு செய்கைக்கு செய்கையாளர்கள் தயாராக இருந்த போதிலும் விதை உருளைக்கிழங்கு கிடைக்காமையினால் பொருளாதார நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளனர்.

உலக வங்கியின் நவீன விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மானிய அடிப்படையில் யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த 21 மெட்ரிக் தொன் உருளைக்கிழங்குகள் குப்பிளானில் அண்மையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது.

அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குறித்த விதை உருளைக்கிழங்குகள் பெக்டோ பெக்டீரியம் கெரெட்டோபோரம் எனப்படும் பக்டீரியா தாக்கத்திற்குள்ளாமையினால் பழுதடைந்திருந்தமை தொடர்பில் கடந்த 17 ஆம் திகதி கண்டறியப்பட்டது.

குறித்த பக்டீரியா தாக்கத்தினால் 21 மெட்ரிக் தொன் விதை உருளைக்கிழங்குகளையும் பயன்படுத்த முடியாத நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் யாழ்.மாவட்டத்தில் இம்முறை எந்தவொரு முறையிலும் உருளைக்கிழங்கு செய்கை முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles