Monday, September 23, 2024
Homeபொலிஸாரிடமிருந்து காப்பாற்றுங்கள் : பல்கலை மாணவன் மன்றாட்டம்..!

பொலிஸாரிடமிருந்து காப்பாற்றுங்கள் : பல்கலை மாணவன் மன்றாட்டம்..!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கடுமையான தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (05.2.2024) திங்கட்கிழமை காலை நடைபெற்றதாக பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இன்னுமொரு அலெக்சாக என்னை வட்டுக்கோட்டை பொலிஸார் கொன்றாலும் என்ற பயத்திலேயே அங்கிருந்து ஓடி வந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்தேன் என பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வட்டுக்கோட்டை கோட்டைக்காடு பகுதியினை சேர்ந்த கருணாகரன் நிதர்ஷன் எனும் 27 வயதான இளைஞனே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பாதிக்கப்பட்ட மாணவன், எனது கற்றல் நடவடிக்கைகளுக்காக இன்று காலை யாழ் பல்கலைக்கழககத்திற்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன்.

இந்நிலையில் சித்தன்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்றுவிட்டு மீள திரும்பி வந்த பொழுது வட்டு இந்து கல்லூரிக்கு அண்மையாக நின்ற பொலிஸார் வழிமறித்துள்ளனர்.

வழிமறித்த பொலிஸார் நாம் மறித்த பொழுது எதற்காக நிற்காது சென்றாய் என கேட்டனர். நீங்கள் போக்குவரத்து பொலிஸார் இல்லை என்ற அடிப்படையில் அவசரமாக சென்றேன் என கூறினேன்.

இந்நிலையில் திடீரென அங்கு வந்த சிவில் உடை தரித்த பொலிஸார் வீதியில் வைத்து சரமாரியாக தாக்கினர். இதனை காணொளியும் எடுத்தேன்.

பின்னர் அவர்கள் தொலைபேசியினையும் பறித்து என்னை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள அறை ஒன்றுக்கு கொண்டு சென்றனர். அறையினுள் பொலிஸார் காலை விரித்து தலைகீழாக தூக்கி அடித்தனர். அடித்து கொண்டு தொலைபேசியில் உள்ள காணொளியை அழிப்பதற்கு தொலைபேசி கடவுச்சொல்லை கேட்டனர்.

நான் மறுத்தேன், மறுத்த பொழுது தொடர்ச்சியாக தாக்குதல் நடாத்தினர். போக்குவரத்து விதிகளை மீறியிருந்தால் எனக்கு தண்டம் விதியுங்கள். இல்லை நீதிமன்றம் அனுப்புங்கள் என கூறியும் அடித்தனர்.

எனக்கு சுவாசம் உள்ளெடுக்க பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக என்னை வெளியில் கொண்டு வந்து அமர்த்தினர்.

அமர்த்திய பொழுது வீதியில் என்னை அடித்த செய்தி கேட்டு தாயார் வருகை தந்தார். இந்நிலையில் வீதியில் தாக்கியபோது கடையில் இருந்த இருந்த சிசிடிவி காணொளியை அழிப்பதற்காக பொலிஸார் அனைவரும் சென்றுவிட்டனர்.

அடிக்கு பயந்து இருந்த நான் அலெக்ஸ்க்கு நடந்த சம்பவத்தை நினைத்து பயத்தில் ஓடி வந்து விட்டேன். தற்பொழுது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்கின்றேன்.

இன்னுமொரு அலெக்சாக என்னை வட்டுக்கோட்டை பொலிஸார் கொன்றாலும் என்ற பயத்திலேயே ஓடி வந்தேன். எனக்கு ஏதும் நடந்தால் வட்டுக்கோட்டை பொலிசாரே முழுமையான பொறுப்பினையும் ஏற்க வேண்டும் என தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments