Sunday, September 22, 2024
Homeஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க இடைக்காலத் தடை..!

ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க இடைக்காலத் தடை..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது 1996ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை சொத்துக் குவிப்பு வழக்கை பதிவு செய்தது. அந்த சமயத்தில் ஜெயலலிதா போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் நடந்த சோதனையில் தங்கம் மற்றும் வைர‌ நகைகள், வெள்ளிப் பொருட்கள், கைக் கடிகாரங்கள் என ஏராளமானவை பறிமுதல் செய்யப்பட்டன.

வழக்கு விசாரணை பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்ததால் பறிமுதல் செய்யப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன. வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா உடல்நலக் குறைவால் 2016ஆம் ஆண்டு காலமானார். இவ்வழக்கில் சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோர் சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்தனர்.

கர்நாடக கருவூலத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 17 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி நகைகள் 6 டிரங்கு பெட்டிகளில் உள்ளன. ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலமிட வேண்டும் என்று நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மார்ச் 6 மற்றும் 7ஆம் தேதியில் தமிழக உள் துறை செயலாளர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரும் நேரில் ஆஜராகி பொருட்களை பெற்றுக்கொள்ள உத்தரவிடப்பட்டது.

இதுதொடர்பாக ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “வழக்கு விசாரணையின் போது ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவரை இவ்வழக்கில் இருந்து நீக்கிவிட்டனர். அதன்பிறகு தான் தீபா மற்றும் தீபக்கை வாரிசுகளாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. ஆகவே, இந்த நகைகள் எங்களுக்குத்தான் சேர வேண்டும். ஆகவே, நகைகளை தமிழக அரசிடமோ அல்லது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடமோ ஒப்படைக்கக் கூடாது” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நவாஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீபா, தீபக் தரப்பில், “ஒருவர் வழக்கில் இருந்து நீக்கப்பட்டுவிட்டால் குற்றவாளி அல்லது நிரபராதி என இரண்டில் ஏதாவது ஒன்றாகத்தான் கருதப்பட வேண்டும். நீக்கிவிட்டால் அவர் சார்ந்த எந்த விஷயங்களையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ளக் கூடாது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் வாரிசுதாரர்களுக்கு செல்ல வேண்டும்” என்று வாதம் வைத்தார்.

இதற்கு பதில் அளிக்க கர்நாடக அரசு தரப்பு கால அவகாசம் கோரியது. இதனையடுத்து, ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் உத்தரவுக்கு நீதிபதி இடைக்காலத் தடை விதித்தார். மேலும் இதுதொடர்பாக வரும் 26ஆம் திகதிக்குள் அரசு தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் வழக்கை தள்ளிவைத்தார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments