Sunday, September 22, 2024
Homeபெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை : சிறைக்கு அனுப்பாதீங்க - உயர் நீதிமன்றத்தை நாடிய ராஜேஷ்...

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை : சிறைக்கு அனுப்பாதீங்க – உயர் நீதிமன்றத்தை நாடிய ராஜேஷ் தாஸ்..!

பாலியல் தொல்லை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை தொடர்பாக உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுக்கோட்டையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். முதல்வரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் பணியில் சட்டம் – ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் இருந்தார். அப்போது பணியில் இருந்த பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ராஜேஷ் தாஸ் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டது.

தனக்கு பாலியல் தொந்தரவு அளித்த ராஜேஷ் தாஸ் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போதைய டிஜிபி, உள் துறை செயலாளரிடம் பெண் எஸ்.பி புகார் அளித்தார். இதன் அடிப்படையில் ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம், ராஜேஷ் தாஸுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,500 ரூபாய் அபராதமும் விதித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. தீர்ப்பினையடுத்து ராஜேஷ் தாஸுக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு செய்தார்.

இவ்வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் விதித்த மூன்று ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்தது. அத்துடன், ராஜேஷ் தாஸின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஷ் தாஸ் தரப்பில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

அதே சமயம் இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என சிபிசிஐடி காவல் துறை தரப்பில் கேட்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் சிபிசிஐடி காவல் துறை அளிக்கும் பதிலை பொறுத்து ராஜேஷ் தாஸ் சிறை செல்வாரா அல்லது விலக்கு அளிக்கப்படுமா என்பது தெரியவரும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments