Sunday, September 22, 2024
HomeIMF பிரதிநிதிகளுடன் இன்று விசேட கலந்துரையாடல்..!

IMF பிரதிநிதிகளுடன் இன்று விசேட கலந்துரையாடல்..!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இந்நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.மகிந்த சிறிவர்தன இதில் பங்கேற்க உள்ளனர்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோருக்கு இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் பங்கேற்பதாக அறிவித்துள்ளதுடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கலந்துரையாடல்களில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கருத்துக்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட தாம் கோரவில்லை எனவும், கடன் வழங்கியவர்களுடன் கலந்துரையாடுவதற்கே கோரியதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவருமான ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments