Colombo (News 1st) காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் துறைமுகங்கள், கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இடையிலான சந்திப்பொன்று அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாரிய அளவிலான கப்பல்கள் மற்றும் படகுகள் உள்நுழைவதற்கு ஏற்ற வகையில் துறைமுகம் 30 மீட்டர் ஆழப்படுத்தப்படவுள்ளதுடன், புதிய அலைதாங்கியை நிர்மாணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியா இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அதிக அளவிலான இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவரவும் இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்குமென இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்திய சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 600 மில்லியன் ரூபா செலவில் காங்கேசன்துறை துறைமுகத்தில் புதிய பயணிகள் முனையம் நிர்மாணிக்கப்பட்டதாகவும் கடந்த 9 மாதங்களில் பாரிய அளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, இந்தியா வழங்கவுள்ள 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை பயன்படுத்தி, காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.