Colombo (News 1st) போதைப்பொருட்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிப்பதே யுக்திய சுற்றிவளைப்பின் நோக்கமென பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (17) இடம்பெற்ற பொலிஸ் பிரஜைகள் குழுவினருடனான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
யுத்தத்தில் வெற்றி பெற்ற நாட்டை போதைப்பொருட்களில் இருந்து மீட்பதற்கான யுத்தமே யுக்திய செயற்றிட்டம் என பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் குறிப்பிட்டார்.
யுக்திய செயற்றிட்டத்தின் முதல் மூன்று மாதங்களுக்குள் உரிய இலக்கின் குறிப்பிட்ட தூரத்தை அடைய முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் சில மாதங்களுக்குள் இந்த நிலைமையை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்து, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார்.
இதனிடையே, யுக்திய செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து பல்வேறு கடுமையான தீர்மானங்களை மேற்கொண்டு வந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 107 என்ற பொலிஸ் அவரச தொலைபேசி இலக்கம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்கும் 107 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடுகளை செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை முற்றிலும் தமிழ் மொழியில் செயற்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.