ஜி7 மாநாடு இன்று [ஜூன் 14] இத்தாலியில் வைத்து நடைபெற உள்ளதால் இந்தியப் பிரதமர் மோடி உட்பட ஜி20 நாடுகளின் தலைவர்கள் இத்தாலியில் குழுமத் தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் இத்தாலி பாராளுமன்றத்தில் எம்.பிக்களிடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நேற்று முன் தினம் [ஜூன் 12] இத்தாலி பாராளுன்ற கீழ் சபையில் இத்தாலியில் உள்ள பிராந்தியங்களுக்கு அதிக சுயாட்சி அளிக்கும் மசோதா மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் ஆளும் வலதுசாரி கூட்டமைப்பு கொண்டுவந்த இந்த மசோதாவை எதிர்கட்சியான 5 ஸ்டார் இயக்கம் கடுமையாக எதிர்த்தது.
மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் 5 ஸ்டார் இயக்க எம்.பி லியோனார்டோ டோனோ, பிராந்திய விவகாரங்கள் துறை அமைச்சர் ராபர்டோ கால்டெரோலி அமர்ந்திருக்கும் இடத்துக்கு நடந்து சென்று அவரது முகத்தில் இத்தாலியக் கொடியை வீசினார்.
இதனால் ஆளும் வலதுசாரி கூட்டணியில் அங்கம் வகிக்கும் லீக் மற்றும் பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சிப் பிரதிநிதிகள் டோனோவிடம் விரைந்து சென்று அவரை பிடித்து இழுத்தனர். இதனால் ஏற்பட்ட கைகலப்பில் இருந்து டோனோவை காப்பற்ற காவலர்கள் படாதபாடு பட்டனர்.
இதனையடுத்து காயமடைந்த டோனோ அவையில் இருந்து வீல் சேரில் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து டோனோ ஊடகங்களுக்கு கூறுகையில், என்னை அவர்கள் பல முறை உதைத்தனர். எனது மார்பில் வலுவாக ஒரு உதை விழுந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது என தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. விரைவில் அதன் மீது மறு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையே பாராளுமன்றத்தில் நடந்த கைகலப்பு தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.