தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும் வசூல் ஈட்டிய படம் மஞ்சுமெல் பாய்ஸ். மலையாள படமான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது நிதி மோசடி புகார் கூறப்பட்டது.
அரூரைச் சேர்ந்த சிராஜ் என்பவர், படத்தின் பின்னணியில் உள்ள தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய நபர்களால் தான் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்து இருந்தார். தான் ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும், படம் வணிக ரீதியாக வெற்றி பெற்ற பிறகு தனக்கு வாக்களித்த படி, 40 சதவீத லாப பங்கு கிடைக்கவில்லை என்றும், இந்த மோசடியால் ரூ.47 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் சினிமா துறையில் நிதி மோசடிகள் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணையில் இறங்கியது. மஞ்சுமெல் பாய்ஸ் பட புகார் குறித்தும், படத்தின் தயாரிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட கறுப்பு பண பரிவர்த்தனை குறித்தும் விசாரித்தது. தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் அந்த படத்தின் நடிகரும், மற்றொரு தயாரிப்பாளருமான சவுபின் ஷாகிரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் படம் தயாரிப்பு முதலீடு, செலவு, வரவு போன்றவை குறித்து அமலாக்கத்துறையினர் விசாரித்தனர். அதன்பிறகு அவர் வீடு திரும்பினார். அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்படும் என்று அமலாக்கத் துறை இயக்குனரக வட்டாரம் தெரிவித்துள்ளது.