பீடி தர மறுத்த தந்தையை, தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை பொலிசார் கைது செய்தனர்.
சென்னை அம்பத்தூர் எம்கேபி நகரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் நேற்று இரவு (17) கொலை செய்யப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் பொலிசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பொலிசார் நடத்திய விசாரணையில் மகேந்திரனின் மகன் அருண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் அவரது மகனே அவரை கொலை செய்து இருக்கலாம் எனவும் கூறப்பட்டது.
இதனையடுத்து சந்தேகமடைந்த பொலிசார் மகேந்திரனின் மகன் அருணிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
பொலிசாரின் விசாரணையில், அருண் தனது தந்தையிடம் பீடி தருமாறு கேட்டதும், அதற்கு மகேந்திரன் மறுப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த அருண் அருகில் இருந்த கல்லை எடுத்து மகேந்திரன் தலை மீது போட்டதும், இதில் படுகாயமடைந்த மகேந்திரன் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அருணை கைது செய்த பொலிசார் , அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.