ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் பயணமாக வட கொரியா பயணம் மேற்கொள்கிறார். இதனிடையே உக்ரைன் மீதான ரஷிய போருக்கு ஆதரவு அளிக்கும் வட கொரியாவுக்கு அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் 844 நாட்களை கடந்துள்ள நிலையில், “உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்டுள்ள சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு வட கொரியா ஆதரவாக இருப்பதை நாங்கள் பாராட்டுகிறோம். ரஷியா மற்றும் வட கொரியா இடையிலான உறவை மேம்படுத்தி வருகிறோம்,” என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
அதிபர் புதினின் வட கொரிய பயணத்தின் போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இரண்டாம் உலக போரை தொடர்ந்து வட கொரியா உருவானதில் இருந்தே ரஷியா மற்றும் வட கொரியா இடையே நட்புறவு இருந்து வருகிறது.
எனினும், கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷியா-உக்ரைன் போர் துவங்கியதில் இருந்து ரஷியா மற்றும் வடகொரியா இடையிலான உறவு இதுவரை இல்லாத அளவுக்கு மேம்பட்டு இருக்கிறது. இதனிடையே உக்ரைன் மீதான போருக்கு உதவும் வகையில், வட கொரியா சார்பில் 7000 கண்டெயினர்களில் ஆயுதங்கள் அனுப்பப்பட்டன.
இதில் வெடி குண்டுகள், அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகள் இடம்பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. உக்ரைன் உடனான போர் தீவிரம் அடைந்ததில் இருந்து, புதின் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் அவர் நண்பர்களை தேடி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.