Thursday, September 26, 2024
Homeசர்வதேச விண்வெளி நிலையம் எலான் மஸ்க் நிறுவனத்திடம் ஒப்படைப்பு..!

சர்வதேச விண்வெளி நிலையம் எலான் மஸ்க் நிறுவனத்திடம் ஒப்படைப்பு..!

சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கின.

விண்வெளி நிலையத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் 1998-ம் ஆண்டு தொடங்கப் பட்டு 2000-ம் ஆண்டு முதல் விண்வெளி வீரர்களின் குழு நடவடிக்கைகளுடன் இயங்கத் தொடங்கியது. பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் 2030-ம் ஆண்டு முடிகிறது.

அதன்பின்னர் விண் வெளியில் இருந்து அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அப்புறப்படுத்தி வளிமண்டலத்திற்கு கொண்டு வருவதற்காக பிரத்தியேக விண்கலம் உருவாக்கப்படுகிறது.

இந்த பணியை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் நாசா ஒப்படைத்துள்ளது. இந்தப் பணிக்கான 843 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7 ஆயிரம் கோடி) மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 4.5 லட்சம் கிலோ எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தை பசிபிக் பெருங்கடலில் தள்ளக் கூடிய ஒரு வாகனத்தை உருவாக்க உள்ளது.

இதுதொடர்பாக நாசா கூறும்போது, யு.எஸ். டி.ஆர்.பிட் வாகனத்தை (விண் கலம்) உருவாக்கி வழங்குவதற்கு ஸ்பேஸ்எக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தின் மதிப்பு 843 மில்லியன் டாலர் ஆகும். இது விண்கலம் தயாரிப்புக்கான தொகை மட்டுமே.

விண்வெளி நிலையத்தை வளிமண்டலத்திற்குள் கொண்டு வருவது மட்டுமல்லாமல், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஆபத்தை தவிர்ப்பதையும் இந்த விண்கலம் உறுதி செய்யும். டிஆர்பிட் விண்கலத்தின் மூலம், சர்வதேச விண்வெளி நிலையம் பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து அப்புறப்படுத்தப்படும்.

அதன் பின்னர் அந்த விண்கலமும், சர்வதேச விண்வெளி நிலைய பாகங்களும் வளிமண்ட லத்தில் நுழையும்போது, அவை இரண்டும் உடைந்து எரியும் என்று தெரிவித்தது. விண்வெளி நிலையத்தின் கட்டமைப்பு இன்னும் நல்ல நிலையில் இருந்தாலும், அதனை அகற்றுவதற்கான எதிர்கால திட்டங்களை இப்போதே உருவாக்க வேண்டும் என்றும் எந்த உதவியும் வழங்கப்படாவிட்டால் அது இறுதியில் தானே பூமியின்மேல் விழுந்து மக்களுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments