Friday, September 27, 2024
Homeபலத்த மழைக்கு 5 பேர் பலி : டெல்லியில் பல பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் மக்கள்...

பலத்த மழைக்கு 5 பேர் பலி : டெல்லியில் பல பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிப்பு..!

தலைநகர் டெல்லியில் கடந்த 2 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் கடந்த 88 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக பலத்த மழைபெய்தது.

இதன் காரணமாக டெல்லியில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இடுப்பு அளவுக்கு தண்ணீர் கரை புரண்டு ஓடியதால் டெல்லியில் நேற்று 60 சதவீத அளவு போக்குவரத்து முடங்கியது.

பலத்த மழை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 1-வது முனையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் வாடகை கார் டிரைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ராம்மோகன் நாயுடு உத்தரவிட்டுள்ளார். நேற்று பிற்பகல் வரை அந்த விமான நிலைய பகுதியை சீரமைக்கும் பணிகள் நடந்தது. அதன் பிறகு இன்று (சனிக்கிழமை) விமான போக்குவரத்து சீரடைந்து வருகிறது.

இதற்கிடையே டெல்லியில் நேற்று இரவும் இன்று அதிகாலையிலும் மீண்டும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேக்கம் தொடர்ந்து காணப்படுகிறது. இன்று (சனிக்கிழமை) 2-வது நாளாக வாகன போக்குவரத்தில் கடும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லி நகரம் ஸ்தம்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தண்ணீர் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டும் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் மழை தண்ணீர் புகுந்து விட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சுரங்கப் பாதைகள் அனைத்திலும் இன்னும் தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.

டெல்லியில் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களின் வீடுகள் மழை தண்ணீரில் மூழ்கி உள்ளன. சுமார் 16 இடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். மழைக்கு இதுவரை 5 பேர் பலியாகி இருக்கிறார்கள். டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் சுவர் இடிந்து 3 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

டெல்லியில் இன்னும் 2 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது. இதனால் டெல்லி மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி இருப்பு வைத்து வருகிறார்கள். இதனை பயன்படுத்தி கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன.

தொடர் மழை காரணமாக டெல்லியில் முக்கிய சாலைகள் அனைத்திலும் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் வாகன போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மிக பலத்த மழை பெய்வதற்கான ஆரஞ்சு வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு டெல்லி அரசு எச்சரித்துள்ளது.

டெல்லியில் சுமார் 80 சதவீத பகுதிகளில் தண்ணீர் தேக்கம் காணப்படுவதால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் நேற்று மாலை முதல் இன்று காலை வரை விடிய விடிய மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். பல பகுதிகள் இருளில் மூழ்கி காணப்பட்டன.

மழை நின்ற பிறகுதான் மின் இணைப்புகள் சீராகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக டெல்லி மக்களின் இயல்பு வாழ்க்கையில் மேலும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments