Sunday, September 22, 2024
Homeவிந்தணு, கருமுட்டை தானம் செய்தவர்களுக்கு குழந்தை மீது எந்த சட்ட உரிமையும் கிடையாது..!

விந்தணு, கருமுட்டை தானம் செய்தவர்களுக்கு குழந்தை மீது எந்த சட்ட உரிமையும் கிடையாது..!

மும்பை ஐகோர்ட்டில் 42 வயது பெண் ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

எனக்கும், எனது கணவருக்கும் வாடகை தாய் மூலம் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரட்டை பெண் குழந்தை பிறந்தன. அந்த குழந்தைகள் பிறக்க எனது தங்கை கருமுட்டையை தானமாக வழங்கியிருந்தார். தற்போது எனது கணவரும், தங்கையும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் எனது தங்கை கருமுட்டையை தானமாக வழங்கியதால் எனக்கு குழந்தைகள் மீது உாிமை இல்லை என கூறுகின்றனர்.

குழந்தைகளை பார்க்க அவர்கள் என்னை விடுவதில்லை. எனவே, குழந்தைகளை பார்க்க என்னை அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

மனுவை நீதிபதி மிலிந்த் ஜாதவ் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுவை விசாரித்த நீதிபதி, விந்தணு அல்லது கருமுட்டையை தானமாக கொடுத்தவர் குழந்தையின் மீது சட்டப்படி உரிமை கோரவோ அல்லது குழந்தையின் பெற்றோர் எனவோ உரிமை கோர முடியாது என்றார். மேலும் நீதிபதி “இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு போடப்பட்ட வாடகைத்தாய் ஒப்பந்தத்தில் மனுதாரரும், அவரது கணவரும் தான் பெற்றோர் என கையெழுத்திட்டு உள்ளனர். எனவே வாடகைத்தாய் மூலம் பிறந்த இரட்டை குழந்தைகளின் தாய் மனுதாரர் என்பது தெளிவாக தெரிகிறது. கருமுட்டையை தானமாக வழங்கிய மனுதாரரின் தங்கைக்கு குழந்தையின் தாய் என உரிமைகோர எந்த சட்ட உரிமையும் இல்லை” எனக்கூறினார்.

மனுதாக்கல் செய்த பெண்ணை வார இறுதிநாளில் 3 மணிநேரம் இரட்டை குழந்தைகளை பார்க்க அனுமதிக்க வேண்டும் என அவரது கணவருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments