Sunday, September 22, 2024
Homeஉக்ரைன் ராணுவம் ஊடுருவல் எதிரொலி : மற்றொரு பிராந்தியத்தில் அவசரநிலை பிறப்பித்த ரஷியா..!

உக்ரைன் ராணுவம் ஊடுருவல் எதிரொலி : மற்றொரு பிராந்தியத்தில் அவசரநிலை பிறப்பித்த ரஷியா..!

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இருந்த போதிலும் போர் முடிவுக்கு வரவில்லை. இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.

வீரர்கள் நேருக்குநேர் மோதாமல் டிரோன், ராக்கெட் மூலம் கட்டமைப்புகளை குறிவைத்து இருநாடுகளும் பரஸ்பர தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில்தான் கடந்த வாரம் திடீரென 10 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் நுழைந்தது ரஷியாவுக்கு தெரியவந்தது. இதனால் அப்பிராந்தியத்தில் அவசரநிலை பிறப்பித்து மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றியதுடன், எல்லையில் இருந்து உக்ரைன் வீரர்களை வெளியெற்ற ரஷியா ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் மற்றொரு எல்லை பிராந்தியமான பெல்கோரோட் பிராந்தியத்திலும் ரஷியா அவசரநிலை பிறப்பித்துள்ளது. உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பெல்கோரோட் பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார்.

இங்குள்ள 5 ஆயிரம் குழந்தைகளை பாதுகாப்பான பகுதியில் உள்ள முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இங்கு மோசமான நிலை உருவாகியுள்ளது. வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் காயம் அடைந்துள்ளனர். உள்ளூர் மக்கள் கவலை அடைந்துள்ளனர். 11 ஆயிரம் மக்கள் தங்களது வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். ஆயிரம் பேர் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என பெல்கோரோட் கவர்னர் வியாசெஸ்லாவ் கினாட்கோவ் தெரிவித்துள்ளார்.

இதனால் குர்ஸ்க், பெல்கோரோட் பிராந்தியங்களில் அசாதாரண நிலை நிலவி வருகிறது. உக்ரைன் 10 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்துள்ள நிலையில், ரஷியாவின் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இருநாட்டு வீரர்களும் நேருக்குநேர் மோதும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனைச் சேர்ந்த 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுடன் நுழைந்தனர்.

இது தொடர்பாக உக்ரைன் வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்..,

“உக்ரைனின் நோக்கம் ரஷியாவின் பகுதியை ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என்து அல்ல. குர்ஸ்க் பகுதியில் இருந்து உக்ரைன் நோக்கி ரஷியாவின் ஏவுகணை தாக்குதலை நிறுத்துவதற்காகத்தான்” எனத் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் படைகள் எப்போது எப்படி ரஷியா எல்லைக்குள் ஊடுருவியது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. மக்கள் வசிக்கும் 74 பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments