Sunday, September 22, 2024
Home78வது சுதந்திர தின விழா.. செங்கோட்டையில் பிரதமர் மோடி : தேசிய கொடி ஏற்றி சிறப்புரை..!

78வது சுதந்திர தின விழா.. செங்கோட்டையில் பிரதமர் மோடி : தேசிய கொடி ஏற்றி சிறப்புரை..!

நாட்டின் 78வது சுதந்திர தின விழாவை ஒட்டி முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்ற உள்ளார். மேலும் முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இதைக் காண டெல்லியில் மக்கள் குவிந்துள்ளனர்.

1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சுதந்திரம் பெற்றது. இதை ஆண்டுதோறும் சிறப்பான முறையில் கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் இன்று 78வது ஆண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. நடப்பாண்டு சுதந்திர தின விழாவை ”வளர்ந்த பாரதம்” என்ற தீமில் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 7.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். இம்முறை புதிய அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முப்படை வீரர்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ் உள்ளிட்டோரின் அணிவகுப்பு நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஒரே இடத்தில் பல முக்கிய தலைவர்கள் குவியவுள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

டெல்லி முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஹர் கர் திரங்கா

மத்தியில் ஆளும் பாஜக அரசு ”ஹர் கர் திரங்கா” என்ர பெயரில் சிறப்பு முன்னெடுப்பை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்து வைத்தது. இதனை நடப்பாண்டிலும் மக்கள் செயல்படுத்தி வருகின்றனர். அதாவது, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்கலாம். தேசிய கொடியை ஏந்தி கொண்டு ஊர்வலமாக, பேரணியாக செல்லலாம்.

இதன் புகைப்படங்களை மத்திய அரசின் https://harghartiranga.com/ என்ற இணையதளத்தில் பகிர்ந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம். இது ஆகஸ்ட் 9 முதல் 15ஆம் தேதி வரை கொண்டாடப்படுவது கவனிக்கத்தக்கது. பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்பட்ட ”ஹர் கர் திரங்கா” புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments