Sunday, September 22, 2024
Homeசிறையில் அடையுங்கள்... மனைவியுடன் சேர்ந்து வாழ மாட்டேன் : போலீசாரிடம் அடம்பிடித்த என்ஜினீயர்..!

சிறையில் அடையுங்கள்… மனைவியுடன் சேர்ந்து வாழ மாட்டேன் : போலீசாரிடம் அடம்பிடித்த என்ஜினீயர்..!

பெங்களூரு கொடிகேஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் விபின் குப்தா. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அவர், கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் விபின் குப்தா பணியாற்றினார். அவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில், கடந்த 4-ம் தேதி வீட்டை விட்டு மோட்டார் சைக்கிளில் சென்ற விபின் குப்தா திரும்பி வரவில்லை.

அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ,1.80 லட்சம் எடுக்கப்பட்டு இருந்ததால், விபின் குப்தா கடத்தப்பட்டு இருப்பதாக கூறி கொடிகேஹள்ளி போலீஸ் நிலையத்திலும், போலீஸ் கமிஷனருக்கு ‘எக்ஸ்’ தளத்தின் மூலமாகவும் விபின் குப்தாவின் மனைவி புகார் அளித்திருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். விபின் குப்தாவை மீட்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், காணாமல் போன கம்ப்யூட்டர் என்ஜினீயர் விபின் குப்தாவை உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் தனிப்படை போலீசார் மீட்டுள்ளனர். அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது விபின் குப்தாவுக்கு 34 வயதாகிறது, ஆனால் அவரது மனைவிக்கு 42 வயதாகிறது. 8 வயது மூத்த பெண்ணை அவர் திருமணம் செய்திருந்தார்.

திருமணத்திற்கு பின்பு கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. விபின் குப்தாவுக்கு அவரது மனைவி தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் அவர் வீட்டை விட்டு ஓடியது தெரியவந்தது.

அதேநேரத்தில் மனைவி தன்னை தொல்லைப்படுத்துவதால் வீட்டுக்கு செல்ல மாட்டேன் என போலீசாரிடம் விபின் குப்தா திட்டவட்டமாக கூறிவிட்டார். தன்னை சிறையில் வேண்டும் என்றால் அடையுங்கள், ஆனால் வீட்டுக்கு மட்டும் செல்ல மாட்டேன் என போலீசாரிடம் அடம் பிடித்துள்ளார். விபின் குப்தாவுக்கு அவரது மனைவி மனரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கடந்த 4-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய விபின் குப்தா மொட்டை அடித்துக்கொண்டு உத்தரபிரதேசத்திற்கு சென்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலமாக பெங்களூருவில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு சென்றிருந்தார். அங்கு சென்று போலீசார் விபின் குப்தாவை மீட்டு இருந்தனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments