Sunday, September 22, 2024
Homeநெல்லை அருகே கோயில் கொடை விழாவில் அண்ணன் தம்பி குத்திக்கொலை : அதிர்ச்சியில் உறைந்த ஊர்...

நெல்லை அருகே கோயில் கொடை விழாவில் அண்ணன் தம்பி குத்திக்கொலை : அதிர்ச்சியில் உறைந்த ஊர் மக்கள்..!

நெல்லை அருகே கோயில் கொடை விழாவில் அண்ணன், தம்பி ஆகிய இருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே காரம்பாடு கிராமத்தில் ஓடைக்கரை சுடலைமாடசாமி திருக்கோவில் கொடை விழா நேற்று இரவு நடைபெற்றது. கொடை விழாவில் கரகாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே கரகாட்ட கலைஞர்களுக்கு பணம் கொடுப்பதில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் இந்த வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியதில் ஒரு பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் மதியழகன் மற்றும் மதி ராஜா ஆகிய அண்ணன், தம்பிகளை மற்றொரு பிரிவினர் கத்தியால் குத்தியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மகேஸ்வரன் என்பவர் கத்திக் குத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதில் கத்தியால் குத்தியவர்கள் மற்றும் காயம் பட்டவர்கள் அனைவரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து திசையன்விளை கக்கன் நகர் பகுதிகளில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய பரூன் ராஜ்குமார் விபின் உட்பட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை எஸ் பி சிலம்பரசன் விடுப்பில் இருப்பதால் குமரி மாவட்ட எஸ்பி தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் கொடை விழாவில் நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அரசியல் கட்சி பிரமுகர்கள், சாமானிய மக்கள் என அனைவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக கொலை செய்யப்பட்டு வருகின்றனர். திமுக ஆட்சியில்தான் போதை பொருட்கள் புழக்கம் மற்றும் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்றும் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து உள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments