Tuesday, September 24, 2024
Homeஆகஸ்ட் 22 ஆம் திகதி கட்சி கொடியை வெளியிடும் விஜய்..!

ஆகஸ்ட் 22 ஆம் திகதி கட்சி கொடியை வெளியிடும் விஜய்..!

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை துவங்கிய விஜய் அதன் கொடியை வெளியிட தேதி குறித்துவிட்டாராம். தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை பார்க்க விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே சிலரோ வியாழக்கிழமை போய் கொடியை வெளியிடுவதா என கேட்கிறார்கள்.

அண்ணா அரசியலுக்கு வாங்கணா என விஜய்யை அவரின் ரசிகர்கள் பல ஆண்டுகளாக அழைத்து வந்தார்கள். அரசியலுக்கு வர ஆழம் பார்த்து வந்த விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை துவங்கினார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டார். கட்சி தொடர்பாக அறிவித்ததில் இருந்து அவ்வப்போது சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தான் கட்சியின் கொடியை வெளியிட முடிவு செய்துவிட்டாராம்.

ஆகஸ்ட் 22ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை வெளியிடப் போகிறார் விஜய் என தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா தயவு செய்து கொடியை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டாம். செய்தியாளர்களை அழைத்து அவர்கள் முன்பு வெளியிடுங்கள்.

கட்சியை துவங்கியதில் இருந்து ஒரு பிரஸ் மீட் கூட வைக்கவில்லை விஜய் என பேசுகிறார்கள். அதனால் ஆகஸ்ட் 22ம் தேதி கொடியை வெளியிட்டது மாதிரியும் இருக்கும், கட்சி தலைவர் என்கிற முறையில் செய்தியாளர்களை சந்தித்தது போன்றும் இருக்கும். ஆக ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிடலாம் அண்ணா என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி வரும் 2026ம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலை தான் குறி வைத்திருக்கிறது. அந்த தேர்தலில் விஜய்யின் கட்சி மாபெரும் வெற்றி பெறும் என அவரின் ரசிகர்கள் நம்புகிறார்கள். 2026ம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்பார் எங்கள் அண்ணன் விஜய் என தளபதி ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே நடிப்புக்கு முழுக்கு போடுகிறார் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் கோட் படம் செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதையடுத்து ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 69 தான் அவர் நடிப்பில் வெளியாகும் கடைசி படமாகும்.

தளபதி 69 படப்பிடிப்பை அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் துவங்க திட்டமிட்டுள்ளனர். விஜய் என்னவோ முழு நேர அரசியலில் ஈடுபட வசதியாக நடிப்புக்கு முழுக்கு போடுவதாக தெரிவித்துவிட்டார். ஆனால் அவரின் இந்த முடிவு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை.

அரசியலுக்கு போனால் என்ன வருடத்திற்கு ஒரு படமாவது நடிங்க விஜய் என பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதற்கிடையே 2026ம் ஆண்டு தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என தற்போதே கணிக்கத் துவங்கிவிட்டார்கள்.

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments