Sunday, September 22, 2024
Homeகுஜராத்தை மிரட்டும் "அஸ்னா" புயல் : முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்..!

குஜராத்தை மிரட்டும் “அஸ்னா” புயல் : முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்..!

குஜராத்தின் கட்ச் அருகே அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குஜராத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்த கனமழைக்கு இதுவரை 29 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய சுமார் 1,200 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதைப்போல தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் சுமார் 20 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

விஸ்வமித்ரி உள்ளிட்ட ஆறுகளில் அபாய அளவை கடந்து வெள்ளம் பாய்வதால் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது.

இந்த நிலையில், அரபிக்கடலில் புயல் உருவாகி இருக்கிறது. கட்ச் மற்றும் அதை ஒட்டியுள்ள பாகிஸ்தான் மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதியில் நீடித்து வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று இருக்கிறது.

இது மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நேற்று 11.30 மணி நிலவரப்படி இது குஜராத்தின் பூஜ் பகுதியில் இருந்து மேற்கு-வடமேற்கே 190 கி.மீ. அருகே மையம் கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது வடகிழக்கு அரபிக்கடலில் மேற்கு-வடமேற்காக நகர்ந்து அடுத்த 2 நாட்களில் இந்திய கடற்பகுதியை விட்டு கடந்து விடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த புயலுக்கு ‘அஸ்னா’ என பாகிஸ்தான் பெயரிட்டு இருக்கிறது.

அரபிக்கடலின் தற்போதைய சூழலை பொறுத்தவரை இந்த புயல் மேலும் வலுப்பெற வாய்ப்பு இல்லை என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இதற்கிடையே குஜராத்தில் நேற்று மழை வெகுவாக குறைந்திருந்தது. வெறும் 4 பகுதிகளில் மட்டுமே 15 மி.மீ. முதல் 26 மி.மீ. வரை மழை பெய்திருந்தது. மீதமுள்ள பகுதிகளில் லேசான தூறல் அல்லது மழை இல்லாத நிலையே காணப்பட்டன.

அதேநேரம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு குறையாததால் கரையோர பகுதிகள் இன்னும் நீருக்குள்ளேயே மூழ்கி உள்ளன. குறிப்பாக கேதா மாவட்டத்தின் கேதா நகரின் முக்கிய சந்தை மற்றும் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

இதைப்போல தேவ்பூமி துவாரகா, பரூச் உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரபிக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதை தொடர்ந்து குஜராத்தில் தீவிர முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குடிசைகள் மற்றும் பலவீனமான கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் அருகில் உள்ள பள்ளிகள், கோவில்கள் மற்றும் பிற கட்டிடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

கட்ச் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்-மந்திரி பூபேந்திர படேலும் ஆய்வு செய்தார்.

ஏற்கனவே கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கும் குஜராத் மக்களுக்கு, இந்த புதிய புயல் சின்னம் மேலும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments