தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்தை இறக்குமதி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான தலா இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்துள்ள மாளிகாகந்த நீதவான், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் பணித்துள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி மனநல, இருதய சிகிச்சைகளை மேற்கொள்ள பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கை முன்வைத்தார்.
எனினும் அந்த கோரிக்கையை நிராகரித்த நீதவான் கெஹலிய ரம்புக்வெல்லவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்குவதாக அறிவித்தார்.
தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தமைக்கு உடந்தையாக இருந்ததாக தெரிவித்து கடந்த பெப்ரவரி இரண்டாம் திகதி கெஹலிய ரம்புக்கவெல்ல கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு இன்றைய தினம் பிணை வழங்கப்பட்டுள்ளது.