ஊழல், மோசடி மற்றும் தவறான நிர்வாகத்தினால் 76 வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டை “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் சரியான திசையில் வழிநடத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பேராசிரியர் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதாரத்தை மேலும் ஸ்திரப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது,
“கடந்த 76 ஆண்டுகளாக, இலங்கை ஊழல், மோசடி மற்றும் திறமையின்மையின் கீழ் இயங்கி, நமது பொருளாதாரத்தையும் சமூகத்தையும் சரியான திசையில் இட்டுச் செல்வதைத் தடுத்தது.
இதனால், நெருக்கடிக்குள் தள்ளப்பட்டோம். இருப்பினும், 2024 ஆம் ஆண்டில், மீண்டெழுவதற்கான அடித்தளத்தை இட்டுள்ளோம். 5 வீத பொருளாதார வளர்ச்சியையும், தொழில்துறையில் சுமார் 10 வீத வளர்ச்சியையும் எட்டுவது சாதகமான நிலை.
பணவீக்கத்தைக் கணிசமாகக் கட்டுப்படுத்துவதும், வணிகச் சமூகத்தை ஊக்குவிக்கும் வகையில் வட்டி விகிதங்களைக் கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்” என்றார்.