Tuesday, April 22, 2025
HomeMain NewsIndiaஇந்தியாவால் தேடப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக்கொலை

இந்தியாவால் தேடப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா உள்பட பல பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவை இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிடுகின்றன. குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய பயங்கரவாதியான அபு கத்தால் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் ஜீலம் மாவட்டத்தில் உள்ள தினா பகுதியில் அபு கத்தால் இருந்தபோது அவரை மர்ம நபர் சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றார்.

சுட்டுக் கொல்லப்பட்ட அபு கத்தால், லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர்களில் ஒருவராகவும், மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹஃபீஸ் சயீத்தின் நெருங்கிய உதவியாளர் ஆவார். மேலும் அவரை லஷ்கரின் தலைமை செயல்பாட்டுத் தளபதியாக நியமித்தார். ஹஃபீஸ் சயீத்தின் உத்தரவுகளை பெற்று அபு கத்தால் காஷ்மீரில் பெரிய தாக்குதல்களை நடத்தினார்.

ஜம்மு-காஷ்மீரில் பல தாக்குதலுக்கு அபு கத்தால் தலைமை தாங்கியுள்ளார். காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி கோவிலில் இருந்து திரும்பிய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தார்.

2023-ம் ஆண்டு ரஜோரியின் தங்ரி கிராமத்தில் பொது மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமையின் குற்றப்பத்திரிகையில் அபு கத்தால் பெயர் இடம்பெற்றுள்ளது.

அதில் அபு கத்தால் உள்பட 3 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளை ஆள் சேர்ப்பு செய்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர் என்றும் காஷ்மீரில் பொது மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அபு கத்தால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments