யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் தொடர்பில் பொது வெளியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
யாழ். போதனா மருத்துவமனையில் பணிப்பாளரின் அனுமதியின்றி அவரின் பணிமனைக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டமை மற்றும் அவரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் மருத்துவமனை பணிப்பாளரால் யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தபோது வழக்காளி சார்பில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனும் எதிராளி சார்பில் சட்டத்தரணி கௌசல்யாவும் முன்னிலையாகினர்.
இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்ட இணக்கப்பட்டின் அடிப்படையில் வழக்கு முடிவுறும் வரை யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளரை பொது வெளியில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா செயல்படுவதற்கு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
