எந்தவொரு சூழ்நிலையிலும் இலங்கைக்கு உதவத் தயார் – ஜனாதிபதியிடம் ரஷ்ய அமைச்சர் தெரிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இலங்கைக்கு ஆதரவளிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் தெரிவித்தார்.

நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர், இன்று (26) பிற்பகல ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை எதிர்கொள்ள வேண்டியுள்ள சவால்கள் குறித்து ரஷ்யாவிற்கு புரிதல் இருப்பதாக இங்கு குறிப்பிட்ட ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர், வலுசக்தி துறையில் மட்டுமன்றி தொழில்நுட்பம், இயந்திர உபகரணங்கள் போன்ற எவ்வகையிலான ஒத்துழைப்பையும் இலங்கைக்கு வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் தமக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பிற்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதி அமைச்சர், இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நீண்டகால உறவுகள் இந்த விஜயத்தின் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நிலவும் நீண்டகால நட்புறவை இங்கு நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடந்த காலங்களில் சோவியத் ரஷ்யா இலங்கைக்கு வழங்கிய தொழில்நுட்ப மற்றும் கைத்தொழில் உதவிகள் அக்காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு பெரும் பக்கபலமாக அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

அண்மைக் காலத்திலும்கூட, இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடுகளில் ரஷ்யா முன்னிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பெருமளவிலான இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வழங்கும் ஒத்துழைப்பையும், இரு நாடுகளுக்கும் இடையிலான சமூக கலாசார உறவுகளையும், சர்வதேச விவகாரங்களில் இலங்கைக்கு ரஷ்யா வழங்கி வரும் ஆதரவையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

பிரதி அமைச்சரின் இந்த விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு காரணமாக அமையும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles