அமெரிக்கா, ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஹோர்மூஸ் ஜலசந்தி பகுதியில் சரக்கு, எண்ணெய் கப்பல்களை அனுமதிக்க ஈரான் ஒப்புக் கொண்டது.
இதை கண்காணிக்க அமெரிக்க கடற்படையின் எம்கியூ-4சி டிரைட்டன் என்ற ஆளில்லாத உளவு ட்ரோன் நேற்று ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து பறந்த அமெரிக்க உளவு ட்ரோன் திடீரென மாயமானது. இந்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது கீழே விழுந்து நொறுங்கியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்க கடற்படையிடம் மொத்தம் 20 எம்கியூ-4சி டிரைட்டன் ட்ரோன்கள் மட்டுமே உள்ளன. ஒரு ட்ரோனின் விலை சுமார் ரூ.1,700 கோடி ஆகும். இந்த ட்ரோன் சுமார் 50,000 அடி உயரத்தில், தொடர்ச்சியாக 24 மணி நேரம் பறக்கும் திறன் கொண்டது. ஒரே நேரத்தில் 7,400 கடல் மைல் தொலைவு பகுதிகளை கடந்து கண்காணிக்கும் திறன்கொண்டது. இந்த அதிநவீன ட்ரோன் மாயமாகி இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
