“இனியும் நல்லவராக இருக்க முடியாது” – துப்பாக்கி ஏந்திய புகைப்படத்துடன் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் விரைவில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இனியும் தான் நல்லவராக இருக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், துப்பாக்கிய ஏந்தியபடியான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள போதிலும், மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. கட்டுப்பாடுகள் மற்றும் கட்டணம் ஏதும் இன்றி ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும், அணு ஆயுத முயற்சியை கைவிட வேண்டும் என்று ஈரானை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக அமெரிக்காவுடன் ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அது வலியுறுத்தி வருகிறது.

எனினும், இது தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

அமெரிக்கா​வுடன் அமை​திப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்​க வேண்டுமானால், முதலில், ஈரான் மற்றும் லெப​னான் மீது போர் தொடுக்​கப்​ப​டாது என்பதற்கும், போர் முழு​மை​யாக நிறுத்​தப்படு​வதற்​கும் அமெரிக்கா முறை​யான உத்​தர​வாதம் அளிக்க வேண்​டும். இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டால், ஹோர்முஸ் நீரிணை நிர்​வாகம் மற்​றும் மேலாண்மை குறித்து ஆலோசிக்கப்படும். அதன் பின்​னரே, அணுசக்தி விவ​காரம் குறித்து ஈரான் விவா​திக்​கும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் நிபந்தனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் சமீபத்தில் தெரிவித்தார். இது தொடர்பாக உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசகர்களுடன் அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் ஆலோசனை மேற்கொண்டதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

இந்நிலையில், தனது ரூத் சமூக ஊடக பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுவாக எழுத்து மூலமாக தனது கருத்துகளைத் தெரிவிக்கும் டொனால்டு ட்ரம்ப், இம்முறை புகைப்படம் ஒன்றையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். குண்டுகள் வெடிக்கும் பின்னணியில், கையில் அதிநவீன துப்பாக்கியுடன் திரைப்பட கதாநாயகன் போல் காட்சியளிக்கும் டொனால்டு ட்ரம்ப், ‘இனியும் நல்லவராக இருக்க முடியாது’ என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஈரானால் ஒருங்கிணைந்து செயல்பட முடியவில்லை. அணுஆயுதமற்ற ஒப்பந்தத்தில் எப்படி கையெழுத்திடுவது என்பது குறித்து அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் விரைவில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்” என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ட்ரம்ப் தனது முந்தைய பதிவுகளில், “ஈரான் சரிவு நிலையில் இருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியை அந்த நாடு விரைவாக மீண்டும் திறக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. ஈரானின் அணுசக்தி விருப்பம், உலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். அணு ஆயுதத்தை அந்த நாடு பெற்றால், முழு உலகமும் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்படும். அணுசக்திப் பிரச்சினை நேரடியாகக் கையாளப்படாவிட்டால், பேச்சுவார்த்தையை அமெரிக்கா முன்னெடுக்காது” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles