சிங்கப்பூர் மெக்பர்சன் வட்டார வீவக வீடு ஒன்று நேற்று திங்கட்கிழமை இரவு தீப்பற்றி எரிந்ததில் எட்டுப் பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜூ செங் ரோட்டில் உள்ள புளோக் 14இன் 18வது தளத்தில் உள்ள அந்த வீட்டில் தீப்பிடித்திருப்பதாக இரவு 9.40 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.
புகையைச் சுவாசித்ததன் காரணமாகப் பாதிக்கப்பட்ட எட்டுக் குடியிருப்பாளர்களுடன் இரு தீயணைப்பாளர்களும் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர் என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது வீட்டினுள் தீ மளமளவென எரிந்துகொண்டு இருந்ததாகவும் தமது படையினர் கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அது தெரிவித்தது.
அந்தத் தீ வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதைப் போல் தெரிவதாக அது தனது பதிவில் குறிப்பிட்டது. அவர்கள் வருமுன்னரே மூன்று குடியிருப்பாளர்கள் அந்த வீட்டைவிட்டு வெளியேறிவிட்டனர்.
தீயை மூட்டிச் சேதம் விளைவித்த குற்றம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். சம்பவம் பற்றித் விசாரணை வருவதாகக் காவல்துறை கூறியது.
