மலேசியாவின் பகாங் மாநிலத்தில் உள்ள செகாமாட் – குவாந்தான் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
பகாங் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வெளியிட்ட தகவலின்படி, அதிகாலை 1.12 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இந்த விபத்தில் Proton Saga, Perodua Alza மற்றும் Perodua Axia ஆகிய மூன்று வாகனங்கள் தொடர்புபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாகனத்திலும் நான்கு பேர் வீதம் பயணம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீயணைப்பு துறையின் பேச்சாளர் கூறுகையில், “Proton Saga காரில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் வீரர்கள் ஈடுபட்டனர். அந்த வாகனத்தில் சிக்கியிருந்த சிறுவன் ஒருவரை மருத்துவக் குழுவினர் பரிசோதித்தபோது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டது,” என்றார்.
மேலும், காயமடைந்தவர்கள் உடனடியாக சுகாதார அமைச்சின் மருத்துவ குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். உயிரிழந்த சிறுவனின் உடல் மேலதிக விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
