பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வலியுறுத்தியும் கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை கவனவீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் மக்களின் அவலங்கள், தியாகங்கள் மற்றும் வாழ்வியலைத் தனது சொல்லிசை பாடல்கள் மூலம் வெளிப்படுத்தி வந்த கலைஞரான சங்கீதன், கடந்த 2 ஆம் திகதி சாவகச்சேரி பொலிஸாரால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கை தமிழ் படைப்பாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், கிளிநொச்சி மாவட்ட பழைய கச்சேரிக்கு முன்பாக திரண்ட போராட்டக்காரர்கள், “பாடினால் சிறையா? பேசினால் கைதா?”, “கலைஞர்களின் குரல்வளையை நெரிக்காதே”, மற்றும் “அநீதியான பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனே நீக்கு” போன்ற கோஷங்களை எழுப்பினர்.
மேலும், சட்டத்தை அடக்குமுறை கருவியாகப் பயன்படுத்த வேண்டாம் எனவும், கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறும் வலியுறுத்திப் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலைஞர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் கலந்துகொண்டு தமது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
சர்வதேச மனித உரிமை பிரகடனங்களை மதித்து, ஏதேச்சதிகாரக் கைதுகளை நிறுத்த வேண்டும் என்பதே இந்த போராட்டத்தின் பிரதான கோரிக்கையாக அமைந்தது.
