மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்திய ஒரு மாபெரும் நெகிழ்ச்சியான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க விசேட அறுவை சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. பிறக்கும் போதே தலையோடு தலை ஒட்டிப்பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகள், சர்வதேச மருத்துவர்களின் அதிரடி முயற்சியால் வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கப்பட்டு தற்பொழுது தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்பியுள்ளனர்.
நைஜீரியாவில் 2023 ஆண்டு மெர்சி மற்றும் குட்னஸ் என்ற இரு இரட்டைப் பெண் குழந்தைகள் தலையோடு தலை ஒட்டிய நிலையில் பிறந்துள்ளன. இவர்களின் மண்டையோடுகள், மூளைத் திசுக்கள் மற்றும் இரத்த நாளங்கள் அனைத்தும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருந்ததால் இவர்களைப் பிரிப்பது என்பது மருத்துவர்களுக்கே மிகப்பெரிய சவாலாக இருந்தது.
இந்த நிலையில், உலகெங்கிலும் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒன்றாக இணைந்தனர்.
செயற்கை நுண்ணறிவு, முப்பரிமாண மாதிரிகள், விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மருத்துவர்கள் இந்த சிக்கலான சத்திரசிகிச்சையை முன்கூட்டியே திட்டமிட்டுப் பயிற்சி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அபுதாபியில் உள்ள ஷேக் கலீபா மருத்துவ நகரில், பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் நூர் உல் ஒவாஸ் ஜீலானி தலைமையிலான மருத்துவக் குழுவினர், நான்கு கட்டங்களாக சுமார் 40 மணித்தியாலங்கள் போராடி இந்த வரலாற்றுச் சாதனை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
தற்போது முழுமையாகக் குணமடைந்த இந்த இரு பிஞ்சு குழந்தைகளும் தங்களது பெற்றோருடன் தாயகம் திரும்பியுள்ளமை ஒட்டுமொத்த உலக மக்களையும் நெகிழ வைத்துள்ளதுடன், மருத்துவத் துறையின் புதிய மைல்கல்லாகவும் பார்க்கப்படுகிறது.
