ரஷ்யாவின் எரிபொருள் நிலையங்களில் வாகனங்களின் வரிசைகள் நீண்டு கொண்டே செல்கின்றன.
பல மாதங்களாக உக்ரைன் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தீக்கிரையாக்கியுள்ளன.
இதனால், பரந்து விரிந்த ரஷ்யா முழுவதும் வாகன ஓட்டிகளுக்கான எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மக்களிடையே விரக்தியும் நிச்சயமற்ற தன்மையும் அதிகரித்துள்ளது.
நாட்டின் பல பிராந்தியங்களில் எரிபொருள் கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் பல மணி நேரமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
எரிபொருள் கிடைக்காமல் மக்கள் தவிப்பதையும், காலியாக உள்ள எரிபொருள் பம்புகள் மற்றும் எகிறும் விலையைக் கண்டு வாகன ஓட்டிகள் ஆத்திரமடைவதையும் காட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
சைபீரியாவின் இர்குட்ஸ்க் நகர மேயர், வரிசையில் காத்திருக்கும் மக்களின் வசதிக்காகத் தற்காலிக நடமாடும் கழிப்பறைகளை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
ஐந்து ஆண்டுகளை எட்டியுள்ள உக்ரைன் போரின் தாக்கம், தற்போதுதான் சாதாரண ரஷ்ய மக்களின் வீடுகளுக்கே நேரடியாகத் தெரியத் தொடங்கியுள்ளது.
மார்ச் மாத இறுதியில் இருந்து, ரஷ்யா மற்றும் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் 50 இற்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளதாக கணக்கிட்டுள்ளது.
பெரும்பாலும், சுத்திகரிப்பு நிலையங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தாக்கப்படுகிறது – உதாரணமாக, கருங்கடல் பகுதியில் உள்ள துவாப்சே சுத்திகரிப்பு நிலையம் இரண்டு வாரங்களில் நான்கு முறை தாக்கப்பட்டது.
இதன் விளைவாக, கடந்த ஜூன் மாதத்தில் ரஷ்யா சுத்திகரித்த கச்சா எண்ணெயின் அளவு கடந்த ஆண்டை விட 25% சரிந்து, ஒரு நாளைக்கு 3.95 மில்லியன் பரல்களாகக் குறைந்துள்ளது.
இது கடந்த இரண்டு தசாப்தங்களில் இல்லாத மிகக் குறைந்த அளவாகும் என்று எண்ணெய் சந்தை பகுப்பாய்வாளர் ஹரி பீச் தெரிவித்துள்ளார்.
