தென்மேற்கு ஈரானின் குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள அந்திமேஷ்க் (Andimeshk) வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் MQ-9 ரக ட்ரோன் (Drone) ஒன்றை தடுத்து நிறுத்திக் கீழே வீழ்த்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அதிரடியாக அறிவித்துள்ளது.
ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதற்கு அருகில் உள்ள பங்தாஷ்ட் , பார்சின் ஆகிய பகுதிகளில் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாகச் செயற்படுத்தப்பட்டுள்ளன.
மறுபுறம், அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு எதிராகத் தங்களது தற்காப்பு மற்றும் பதிலடி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் “தாக்குதல் உள்கட்டமைப்புகளை” அழிப்பதே தற்போதைய முக்கிய நோக்கம் என்றும், அடுத்தடுத்த கட்டத் தாக்குதல்கள் தொடரலாம் என்றும் IRGC இன் செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.
அத்துடன், பிராந்தியத்தில் உள்ள பல அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் IRGC உரிமை கோரியுள்ளது.
தெஹ்ரானுக்கு கிழக்கே உள்ள இப்பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில், அங்குள்ள விமான நிலையத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கொர்ரமாபாத் (Khorramabad) பகுதியிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.
மத்திய மர்காசி மாகாணத்தில் உள்ள இப்பகுதியில் புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஈரானின் முக்கிய கனநீர் உள்கட்டமைப்புகளில் ஒன்று இங்கு அமைந்துள்ளதால், இப்பகுதி குறிவைக்கப்பட்டிருப்பது உத்தி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
