வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நேற்று (16) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெஷாவரின் தெஹ்கல் பயான் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டில் மரச்சாமான்கள் மற்றும் மெத்தைகள் வைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து திடீரென தீப்பரவத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மெத்தைகள் மற்றும் மரச்சாமான்கள் எரிந்ததால் வீடு முழுவதும் அடர்ந்த புகையும், கடும் வெப்பமும் சூழ்ந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அறையை விட்டு வெளியேற முடியாமல், உள்ளேயே சிக்கித் தவித்துள்ளனர்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதன் பின்னர், வீட்டில் நடத்தப்பட்ட தேடுதல் பணியின்போது ஒரே அறையிலிருந்து உயிரிழந்த 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
