யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, அப்பகுதி மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது வாரமாகவும் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 36 ஆண்டுகளாகத் தங்களின் சொந்த நிலங்களை இழந்துள்ள மக்கள், பலாலி சந்தியில் ஒன்றுகூடி இந்தப் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
பல தசாப்தங்களாகத் தமக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் காணிகளை இழந்த நிலையில், அகதிகளாகவும் வீடற்றவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமது சொந்தக் காணிகளில், இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், வர்த்தக நிலையங்களையும் அமைத்துச் சுயதேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். சொந்த நிலங்களில் வேற்று நபர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கண்டு தாங்கள் மனவேதனை அடைகின்றனர் என்றும், மிக விரைவில் தங்களின் காணிகளையும் வீடுகளையும் மீட்டுத் தர வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமது நீண்டகாலப் போராட்டத்துக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர்.
