
காதலனின் காருக்கு உதட்டுச் சாயத்துடன் கொடுத்த முத்தங்களுக்காக காவல்துறை அபராதம் விதித்து அதனை அழிக்க உத்தரவிட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரத்தில் தனது காதலனின் காரின் மீது, உதட்டுச் சாயத்துடன் கூடிய 3,400 முத்தக் குறியீடுகளைப் பதித்ததற்காக, அந்தக் காரின் உரிமையாளருக்கு காவல்துறை ரூ. 5,500 அபராதம் விதித்ததுடன் அதை அழிக்கவும் உத்தரவிட்டது.
கடந்த இரண்டு நாள்களாக, முத்தக் குறியீடுகள் பதித்த கார் ஒன்று நகரின் பகுதியில் வலம் வந்து கொண்டிருந்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
இதனைக் கண்டறிந்த காவல்துறையினர், அந்தக் காரின் உரிமையாளரும், காதலனுமான ஆதித்யா சிகர்வாரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காரின் வடிவத்தை மாற்றியமைத்ததற்காக மோட்டார் வாகனச் சட்டப்படி, ரூ. 5,500 அபராதம் விதிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆதித்யா சிகர்வாரிடம் கேட்டபோது, “என்னுடைய காதலி 3.5 மணிநேரம் செலவழித்து காரின் மீது 3,400 முத்தக் குறியீடுகளை உருவாக்கினார். அந்த விடியோவை சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
இது சட்டப்படி குற்றம் என்பது எனக்குத் தெரியாது. காவல்துறையினரின் நடவடிக்கைக்குப் பிறகு, காரின் மீதுள்ள ஒட்டுமொத்த முத்தக் குறியீடுகளை அழித்ததோடு, அபராதத்தையும் செலுத்தினேன். சட்டத்தை மீறும் செயலை ஒருபோதும் யாரும் செய்யக்க்கூடாது” என்று தெரிவித்தார்.
