திருவிழாக்கள் மற்றும் ஆலய உற்சவங்களின்போது பயன்படுத்தப்படும் அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், அதிக சத்தம் எழுப்பும் வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றை ஒழுங்குபடுத்த புதிய சட்ட ஏற்பாடுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் திகதி பண்டத்தரிப்பு, பிரான்பற்று பகுதியில் இடம்பெற்ற முருகன் ஆலயத் திருவிழாவில் அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள் மற்றும் வாணவேடிக்கைகளால் 500 இற்கும் மேற்பட்டோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து, நேற்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.
இதன்படி, வடக்கு மாகாணத்தின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் தங்களது அதிகார வரம்புக்குள் உடனடியாக நியமத்துணை விதிகளை உருவாக்கி நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருவிழாக்களுக்கு அனுமதி வழங்கும்போது மின்விளக்குகள், ஒலி அமைப்புகள் மற்றும் வானவேடிக்கைகளின் பயன்பாட்டுக்கான தெளிவான பாதுகாப்பு நிபந்தனைகளையும் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும், அதீத ஒளி மற்றும் அதிக சத்தம் பொதுமக்களின் கண்கள், செவிகள் மற்றும் ஒட்டுமொத்த உடல்நலத்துக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை கருத்திற்கொண்டு, பாதுகாப்புத் தரநிலைகளை உருவாக்குவது குறித்தும் ஆராயப்பட்டது.
குறித்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மின்விளக்குகளுக்கு உரிய அனுமதி பெறப்பட்டிருந்ததா, அவற்றை பயன்படுத்துவதற்கு பாதுகாப்புத் தரநிலைகள் பரிசோதிக்கப்பட்டனவா, அவை எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்பன தொடர்பில் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து தகவல்களைப் பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போதுள்ள சட்டங்களில் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் கண்டு, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் புதிய சட்ட ஏற்பாடுகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான வானவேடிக்கைகள் அல்லது அதிக ஒளி, அதிக சத்தம் கொண்ட உபகரணங்கள் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் தற்போதுள்ள சட்டத்தின் கீழ் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தவும் கலந்துரையாடப்பட்டது.
ஆலய நிர்வாகங்கள், விழா ஏற்பாட்டாளர்கள், உள்ளூராட்சி மன்றங்கள், பொலிஸார் மற்றும் சுகாதாரத் துறையினர் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
