“சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா அசாதாரண முன்னேற்றம்” – பிரதமர் மோடி பெருமிதம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா அசாதாரண முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, சுற்றுச்சூழல் தொடர்பான பாரிஸ் உச்சி மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே நிறைவேற்றிய ஒரே ஜி20 நாடு இந்தியா மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பசுமைப் தீர்ப்பாயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல், பருவநிலை இயக்கவியல் எதிர்காலம் குறித்த சர்வதேச மாநாடு புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று தொடங்கியது. இந்த இரண்டு நாள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களில் இந்தியா பல நூற்றாண்டுகளாக உலகுக்கு வழிகாட்டி வந்துள்ளது. தனது கலாச்சார அனுபவங்களின் அடிப்படையில் நவீன கால காலநிலை சவால்களுக்கு இந்தியா தீர்வுகளை வழங்குவதோடு, உலகளாவிய கூட்டு நடவடிக்கைகளுக்கும் அழைப்பு விடுத்து வருகிறது.

கார்பன் வெளியேற்றத்துக்கான பொறுப்பு பெரும்பாலும் நியாயமற்ற முறையில் வளரும் நாடுகள் மீது சுமத்தப்படுகிறது என்பது நாம் அறிந்ததே. வரலாற்று ரீதியிலான உண்மை என்னவென்றால், இன்னும்கூட இந்தியாவின் தனிநபர் கார்பன் வெளியேற்ற அளவு உலகளாவிய சராசரியில் பாதி அளவுக்கும் கீழாகவே உள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் தொடர்புடைய ஒவ்வொரு துறையிலும் இந்தியா அசாதாரணமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு இந்தியா அதிக முக்கியத்துவத்தை அளித்து வருகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற COP21 உச்சிமாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே நிறைவேற்றிய ஒரே ஜி20 நாடு இந்தியா. இது இந்தியாவின் வலிமையை பறைசாற்றுகிறது.

புதைபடிவமற்ற எரிபொருள் பயன்பாடு, சூரிய ஆற்றல் திறன், கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவது என எந்த அளவுகோளாக இருந்தாலும் இன்று உலகம் முழுவதும் இந்தியாவின் செயல்பாடு நேர்மறையாகப் பேசப்படுகிறது.

12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் சூரிய மின் உற்பத்தி சுமார் 2 ஜிகாவாட்டாக இருந்தது. தற்போது அது 160 ஜிகாவாட்டை தாண்டியுள்ளது. வீடுகளை சூரிய மின்சக்தி உற்பத்திக்கான மையங்களாக மாற்றுவதற்கான மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 50 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் கூரை சூரிய மின்சக்தித் தகடுகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கு சுமார் ரூ.80,000 வரை அரசு வழங்குகிறது.

சூரிய மின் ஆற்றலைப் போலவே, பிற தூய எரிசக்தித் துறைகளிலும் இந்தியா குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் காற்றாலை மின் உற்பத்தித் திறன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. நீர்மின் உற்பத்தித் திறனும் கணிசமாக வளர்ந்துள்ளது. மேலும், நாடு இப்போது அணுசக்தி உற்பத்தியையும் விரைவாக முன்னெடுத்து வருகிறது.

மிக சமீபத்தில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது உலகின் மிக நீளமான ஹைட்ரஜன் ரயில். இதேபோல், கடந்த 12 ஆண்டுகளில் நமது நாட்டில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 950 மடங்கு அதிகரித்துள்ளது.” என தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles