சிறீதரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்கக் கோரி அர்ச்சுனா வலியுறுத்து

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆற்றிய உரை தொடர்பில் சபையில் சர்ச்சை எழுந்துள்ளது.

சிறீதரன் எம்.பியின் உரையில் உள்ள விடுதலைப்புலிகள் தொடர்பான விடயங்களை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு யாழ்ப்பாணம் மாவட்ட சுயேச்சைக் குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வலியுறுத்தியதையடுத்து, சபாபீடத்துக்குத் தலைமை தாங்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி. சானக மாதுகொட அந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

விவாதத்தின் போது உரையாற்றிய சிறீதரன் எம்.பி., தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமை, அதனால் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு மற்றும் கவலைகள், அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகள், விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை நீக்கத்தின் அவசியம் மற்றும் நாட்டில் நல்லிணக்கம் மலர அரசு செய்ய வேண்டியவை குறித்து மிகவும் உணர்வுபூர்வமாகக் கருத்துக்களை முன்வைத்தார்.

சிறீதரன் எம்.பியின் உரைக்குப் பிறகு ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எம்.பி., நாடாளுமன்றத்தில் இனங்களுக்கிடையே பிரச்சினைகளையும் பிளவுகளையும் ஏற்படுத்தும் வகையில் கருத்துக் கூறுவது அரசமைப்பை மீறும் செயல் எனக் குறிப்பிட்டு, அவரது உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு கோரினார்.

இதனையடுத்து, சபாபீடத்துக்குத் தலைமை தாங்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பி. சானக மாதுகொட கருத்துத் தெரிவிக்கையில், சிறீதரனின் உரையில் விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தால், அவற்றை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு செயலாளர் குழுவைக் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles