ஜனாதிபதி செயலகம் முன்பாக பிக்குகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நிறைவு

ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பௌத்த பிக்குகள் குழுவொன்று நேற்று வியாழக்கிழமை (15) மாலை முதல் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக முன்னெடுத்து வந்த போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஞானசார தேரரின் சமய அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும், பௌத்த பிக்குகள் சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் காவி உடை அணிவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடை செய்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, காலி வீதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரங்கள் அகற்றப்பட்டன.

இதனையடுத்து, பௌத்த பிக்குகள் முன்னெடுத்து வந்த போராட்டமும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விடுதலை வழங்குமாறு கோரி மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ‘காவி உடைக்கு நீதி – சுதந்திர பாதயாத்திரை’யில் பங்கேற்ற பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் கண்டியில் இருந்து பாதயாத்திரையாக கொழும்பு நோக்கி நேற்று வியாழக்கிழமை (15) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் வந்தடைந்து, அங்கு, ஞானசார தேரருக்கு விடுதலை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் உறுதியான பதிலை வழங்கவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், குறித்த போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை வரை தொடர்ந்தது.

இந்நிலையில், ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள உலப்பனே ஸ்ரீ சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 தேரர்களுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், செயலக வளாகத்தில் தங்குவதை தடை விதித்தும் கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) இந்த தடை உத்தரவை பிறப்பித்தது.

இதையடுத்து, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை பொலிஸார் வாசித்துக் காட்டினர்.

இதனை பிக்குகள் ஏற்க மறுத்து பிரித் பாராயணம் ஓதியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், சிறைச்சாலை பேருந்து ஒன்றும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் தமது போராட்டத்தைக் கைவிட்டு, சம்பவ இடத்திலிருந்து கலைந்து சென்ற நிலையில், பிக்குகள் முன்னெடுத்து வந்த போராட்டமும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles