இஸ்ரேலில் நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்றத் தேர்தலில், வாக்களிக்கத் தகுதியுடையவர்களில் 77.7 சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர் என அந்நாட்டின் மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 1999ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான அதிகூடிய வாக்குப்பதிவு இதுவாகும்.
சுமார் 7.33 மில்லியன் வாக்காளர்களில், 5.69 மில்லியனுக்கும் அதிகமானோர் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் வாக்களித்துள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு தேர்தலில் 70.63 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியிருந்த நிலையில், இம்முறை அது 7.1 சதவீதப் புள்ளிகளால் அதிகரித்துள்ளது.
1999ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 78.7 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியிருந்தது. அதன் பின்னர் தற்போது அதிகூடிய வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
இஸ்ரேலுக்குள் வாழும் அரபு சமூகத்தினரிடையே வாக்குப்பதிவு சுமார் 80 சதவீதத்தை எட்டியுள்ளதாக இஸ்ரேலின் சனல் 12 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இது 1999ஆம் ஆண்டு பதிவான அளவை விட ஐந்து சதவீதப் புள்ளிகள் அதிகமாகும்.
இதேவேளை, இஸ்ரேலிய இராணுவத்தினரிடையே மாலை 5 மணியளவில் வாக்குப்பதிவு 68 சதவீதத்தைக் கடந்திருந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு தேர்தலில் இதே நேரத்தில் 65 சதவீத வாக்குப்பதிவே பதிவாகியிருந்தது.
உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு வாக்களிப்பு நிலையங்கள் மூடப்பட்டன. எனினும், அந்த நேரத்தில் வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வாக்களிப்பு நேரத்தை இரவு 10 மணிக்குப் பின்னரும் நீடிக்குமாறு லிக்குட் கட்சி விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வலதுசாரி வாக்காளர்களுக்கு ஸ்மோட்ரிச் அவசர வேண்டுகோள்
இஸ்ரேலின் தீவிர வலதுசாரி நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், வலதுசாரி ஆதரவாளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கடைசி நேரத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரபு சமூகத்தினரிடையே வாக்குப்பதிவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இடதுசாரி அரசாங்கம் ஆட்சிக்கு வரக்கூடிய அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
“நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்! இன்னும் வெற்றி பெற முடியும்” என அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்
