Sangathy
Sports

இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி இன்று..!

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

வெஸ்ட்இண்டீசில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி கலந்து கொள்ளும் முதல் ஆட்டம் இதுவாகும். உலகக் கோப்பையுடன் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விடைபெற்று விட்டதால், அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. உலகக் கோப்பை அணியில் மாற்று வீரராக இடம் பெற்ற சுப்மன் கில் இந்த தொடரின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இடைக்கால பயிற்சியாளராக தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் வி.வி.எஸ்.லட்சுமண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் மற்றும் 20 ஓவர் அணிக்கு புதிய கேப்டன் விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், 2026-ம் ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு வலுவான அணியை தயார்படுத்தும் செயல்முறை இந்த தொடரில் இருந்தே தொடங்குகிறது. உலகக் கோப்பை தொடரில் அங்கம் வகித்த ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் ஆகியோர் 3-வது ஆட்டத்தில் இருந்து அணியினருடன் இணைகின்றனர். ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். போட்டியில் அதிரடியில் கலக்கிய அபிஷேக் ஷர்மா, ரியான் பராக் ஆகியோர் அறிமுக வீரர்களாக அடியெடுத்து வைப்பார்கள் என்று தெரிகிறது. இந்திய அணியில் பேட்டிங்கில் சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் ஷர்மா, ரிங்கு சிங், ரியான் பராக்கும், பந்து வீச்சில் ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தரும் வலுசேர்க்கிறார்கள்.

ஜிம்பாப்வே அணியில் பேட்டிங்கில் ஜோனதன் கேம்ப்பெல், பராஸ் அக்ரமும், பந்து வீச்சில் பிளஸ்சிங் முஜரபானி, பிராண்டன் மவுட்டாவும், ஆல்-ரவுண்டராக கேப்டன் சிகந்தர் ராசா, பிரையன் பென்னெட்டும் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள்.

இளம் வீரர்களை உள்ளடக்கிய வலுவான இந்திய அணிக்கு, உள்ளூர் சூழல் சாதகத்தை சரியாக பயன்படுத்தி ஜிம்பாப்வே அணி சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இவ்விரு அணிகளும் 20 ஓவர் சர்வதேச போட்டியில் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 6 ஆட்டத்தில் இந்தியாவும், 2 ஆட்டத்தில் ஜிம்பாப்வேயும் வெற்றி பெற்று இருக்கின்றன.

இந்த போட்டிக்கான இரு அணி வீரர்கள் வருமாறு:-

இந்தியா: சுப்மன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் ஷர்மா, ரிங்கு சிங், துருவ் ஜூரெல், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷர் தேஷ்பாண்டே, சாய் சுதர்சன், ஜிதேஷ் ஷர்மா, ஹர்ஷித் ராணா.

ஜிம்பாப்வே: சிகந்தர் ராசா (கேப்டன்), பராஸ் அக்ரம், பிரையன் பென்னெட், ஜோனதன் கேம்ப்பெல், டெண்டாய் சத்தாரா, லூக் ஜாங்வே, இன்னசென்ட் கயா, கிளைவ் மடான்டே, வெஸ்லி மெட்விரே, டாடிவான்சே மருமானி, வெலிங்டன் மசகட்சா, பிராண்டன் மவுட்டா, பிளஸ்சிங் முஜரபானி, தியான் மயர்ஸ், ஆண்டம் நக்வி, ரிச்சர்ட் கவரா, மில்டன் சவும்பா.

மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 3, 4, 5 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Related posts

Gehansa advances to fourth round at SSC open

Lincoln

Williamson steers New Zealand to thrilling last-ball win

Lincoln

இலங்கை வந்த ரோஹித், கோஹ்லி..!

Tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy