Monday, February 2, 2026
HomeMain Newsபதில் தாக்குதல் வேண்டாம் : ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..!

பதில் தாக்குதல் வேண்டாம் : ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..!

இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை நடத்த வேண்டாம் என ஈரானுக்கு அமெரிக்கா தெரிவித்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரான் ஆதரவு பெற்ற பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு மற்றும் லெபனானின் ஹெஸ்புல்லா இயக்கம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் தாக்குதலில் ஹெஸ்புல்லாவின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதால் கோபமடைந்த ஈரான் கடந்த 1ஆம் திகதி இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது.

இதற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

அதன்படி நேற்று அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் நேரடி தாக்குதல் நடத்தியது.

ஈரானின் இராணுவத் தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையின் 100 போர் விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கியது.

இதில் ஏவுகணை, டிரோன் உற்பத்தி ஆலைகள், ஆயுதக் கிடங்குகள், இராணுவ தளங்கள் சேதமடைந்தது.

இஸ்ரேலின் தாக்குதலில் இராணுவ வீரர்கள் 4 பேர் பலியானார்கள் என்றும், இராணுவ தளங்கள் சிறிது சேதங்கள் ஏற்பட்டது என்றும், இஸ்ரேலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தெரிவித்தது.

இதனால் இரு நாடுகளிலும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவைச் சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் ஈரானுக்கு அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை நடத்த வேண்டாம் என்றும் அது போன்ற தவற்றைச் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்நாட்டுக்கு உரிமை உள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலளிப்பதில் ஈரான் தவறு செய்யக் கூடாது.

அமெரிக்கப் படைகள் மற்றும் பிராந்தியம் முழுவதும் உள்ள வசதிகளைப் பாதுகாப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular