Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaகுடிநீர் பிரச்சினை - அயல் வீட்டுக்காரர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

குடிநீர் பிரச்சினை – அயல் வீட்டுக்காரர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

மட்டக்களப்பு வவுணதீவில் குடிநீர் பிரச்சினை காரணமாக அயல் வீட்டுக்காரர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவரை வவுணதீவு பொலிஸார் கைது செய்ததுடன், ஒரு துப்பாக்கியையும் மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.

கன்னங்குடா பாடசாலை வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய பாக்கியராசா சதீஸ்கரன் என்பவரே இதில் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்தவரின் சகோதரரின் காணியில், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பு இருந்துள்ள நிலையில், இந்தக் குடிநீரை அயல் வீட்டைச் சேர்ந்தவரும் (துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்) பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால், அதற்கான கட்டணத்தை அவர் செலுத்தாததால், நீர் வழங்கல் சபையினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, குடிநீரைப் பயன்படுத்திய அயல் வீட்டுக்காரரிடம், “நீர் பயன்படுத்திவிட்டு ஏன் கட்டணம் செலுத்தவில்லை?” என கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், சம்பவ நாளான திங்கட்கிழமை பிற்பகல் 4:30 மணியளவில், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் அயல் வீட்டுக்காரர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில், கால் தொடை பகுதியில் படுகாயமடைந்த பாக்கியராசா சதீஸ்கரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட அருளானந்தம் யோகேஸ்வரன் என்பவர் (சின்வன் என அழைக்கப்படுபவர்) கைது செய்யப்பட்டதுடன், துப்பாக்கியும் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular