Monday, February 2, 2026
HomeSportsபதிலடி கொடுத்த தென் ஆப்பிரிக்கா: 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

பதிலடி கொடுத்த தென் ஆப்பிரிக்கா: 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி அதே டார்வின் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. மார்க்ரம் 18 ரன்களிலும், ரிக்கல்டன் 14 ரன்களிலும், பிரிட்டோரியஸ் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இந்த இக்கட்டான சூழலில் களமிறங்கிய ப்ரீவிஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். ஆஸ்திரேலிய பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அவர் சதமடித்து அசத்தினார்.

அவருக்கு சிறிது ஒத்துழைப்பு கொடுத்த ஸ்டப்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல் மற்றும் துவார்ஷியூஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கீரின் 9 ரன்னில் வெளியேறினார்.

இதனை தொடர்ந்து மார்ஷ் 22 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் அரை சதம் கடந்தார். அவர் 24 பந்தில் 50 எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 17.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular