முகப்பருவை கட்டுப்படுத்தும் இலகு வழிகள்!

இன்றையகால இளைஞர்கள் பலரும் சந்திக்கும் பெரும் பிரச்னை முகப்பரு. இதற்காக, செயற்கை அழகுச் சாதனப் பொருட்களை வரம்புமீறிப் பயன்படுத்துகிறார்கள். இதனால் இவர்களுக்கு பருக்கள் போகிறதோ இல்லையோ, முகத்தின் பொலிவு போவதுதான் உண்மை.நம் தோலின் இரண்டாம் அடுக்கில் எண்ணெய்ச் சுரப்பிகள் ஏராளமாக உள்ளன. இவை ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் தூண்டுதலால், சீபம் எனும் எண்ணெய்ப் பொருளைச் சுரக்கின்றன.

இந்த சீபம் முடிக்கால்களின் வழியாகத் தோலின் மேற்பரப்புக்கு வந்து, தோலையும் முடியையும் மினுமினுப்பாகவும் மிருதுவாகவும் வைத்துக் கொள்கிறது. இளமைப் பருவத்தில் ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதால், சீபமும் அதிகமாகவே சுரக்கிறது. இதனால், முகத்தில் எண்ணெய்ப்பசை அதிகரிக்கிறது. இந்நிலையில், மாசடைந்த காற்றில் உள்ள தூசும் அழுக்கும் இந்த எண்ணெய்ப் பசையில் சுலபமாக ஒட்டிக் கொள்ளும். இதன்விளைவு, எண்ணெய் சுரப்பிகளின் வாய்ப்பகுதி மூடிக்கொண்டு, தோலுக்கு அடியில் சுரக்கும் சீபம் வெளியே வர முடியாமல், உள்ளேயே தங்கிவிடும். இப்படிச் சீபம் சேரச்சேரத் தோலில் கோதுமை ரவை அளவில் வீக்கம் உண்டாகும். இதைதான் பரு என்கிறோம்.

எதனால் ஏற்படுகிறது?

பொதுவாக 13 வயதில் முகப்பரு தொடங்கி 35 வயதுவரை இது நீ்டிக்கும். சிலருக்கு, இளமைப்பருவம் கடந்த பிறகும் நீடிக்கலாம். குடும்பத்தில் யாருக்கேனும் இருந்திருந்தால், வாரிசுகளுக்கு வர அதிக வாய்ப்புண்டு. சில பெண்களுக்கு மாதவிலக்கின்போது மாறும் ஹார்மோன்களின் அளவினாலும் அந்த சமயங்களில் மட்டும் முகப்பரு ஏற்படும். அதுபோன்று, சினைப்பையில் நீர்க்கட்டி இருக்கும் பெண்களுக்கு முகப்பரு வருவது வழக்கம். ஆல்பா ரெடக்டேஸ் எனும் என்சைம் அதிகமாக இருப்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் ஏற்படலாம். இந்த என்சைம் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகப்படுத்தி, பருக்கள் வர வழிவகுக்கிறது.

என்ன சிகிச்சை?

பருக்களின் மேல் பூசப்படும் களிம்புகளும் ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளும் ஆரம்பநிலைப் பருக்களைக் குணப்படுத்திவிடும். பருக்கள் மீண்டும் வராமல் தடுக்க, மருத்துவர் சொல்லும் கால அளவுக்குத் தொடர்ச்சியாகச் சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். சீழ்க்கட்டி அல்லது உறைக்கட்டி நிலையில் பருக்கள் இருந்தால், கரும்புள்ளி அல்லது குழிப்பள்ளம் விழுந்து தழும்பாகி முகத்தின் அழகைக் கெடுத்துவிடும்.

இன்றைய மருத்துவத் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் இந்த தழும்புகளை நிரந்தரமாகப் போக்க கெமிக்கல் பீல், டெர்மாபரேஷன், கொலாஜென் சிகிச்சை, லேசர் சிகிச்சை, சிலிகான் சிகிச்சை என்று நிறைய வழிமுறைகள் வந்துவிட்டன. இவற்றைத் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்தி, தழும்புகளை நீக்கி, முகப்பொலிவை மீட்கலாம்.

பருக்கள் வராமல் தடுக்க…

முகத்தில் எந்தக் களிம்பைப் பூசினாலும், 20 நிமிடங்களுக்கு மேல் அதை வைத்திருக்கக் கூடாது. காரணம், அதற்கு மேல் களிம்பு தங்கினால், அதில் தூசு சுலபமாக ஒட்டிக்கொள்ள, எண்ணெய்ச் சுரப்பிகள் அடைபட்டு முகப்பருவுக்கு வழி அமைத்துவிடும்.தினமும் குறைந்தது மூன்று முறை முகத்தைச் சோப்புப் போட்டு இளஞ்சூடான தண்ணீரில் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சந்தனச் சோப்பு நல்லது. அடிக்கடி சோப்பை மாற்றக் கூடாது. சுத்தமான பருத்தித் துண்டால் முகத்தைத் துடைக்க வேண்டும். முகத்தைத் துடைப்பதற்கென்று தனியாகத் துண்டு வைத்துக் கொள்வது இன்னமும் நல்லது. முகத்தை ரொம்பவும் அழுத்தித் துடைக்கவும் கூடாது. வாரத்திற்கு இருமுறை வெந்நீரில் ஆவி பிடிப்பது நல்லது. முகப்பரு உள்ளவர்கள் முகத்தில் பவுடர் பூசுவதைத் தவிர்ப்பது நல்லது.

கொழுப்பு உணவு வேண்டாம்

முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவுகளைக் குறைத்துக் கொண்டால், பருக்கள் சீக்கிரத்தில் குணமாகும். உடலில் கொழுப்பின் அளவு கூடும்போதும், எண்ணெய்ச் சுரப்பிகளின் துவாரம் மூடிக்கொள்ள வாய்ப்புண்டு.

கட்டுப்படுத்த என்ன வழி?

எந்நேரமும் பருக்களை விரல்களால் கிள்ளுவதை முதலில் கைவிடவேண்டும். பருக்களிலிருந்து வெள்ளை நிறக் குருணைகளை வெளியேற்ற பருக்களைக் கிள்ளாதீர்கள், பிதுக்காதீர்கள். மிகவும் தேவைப்பட்டால் மட்டும் இதற்கென்றே இருக்கிற இடுக்கியைப் பயன்படுத்துங்கள்.

உணவு முறை

நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ளுவது நல்லது. தினசரி 3 லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். கொழுப்பு மிகுந்த இறைச்சி, நெய், வெண்ணெய், வனஸ்பதி, பாலாடை, முட்டை, கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட், ஃபுட்டிங், பீட்சா, பர்கர், தந்தூரி, பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், எண்ணெய் பலகாரம் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles