களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்கு, போத்தலினுள் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து போதைப்பொருட்களை வழங்க முயன்ற நபர் ஒருவரை களுத்துறை வடக்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து சுமார் 4 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான நான்கு வகையான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேக நபரைப் பார்வையிட வந்தவர் காவல்துறையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்ட போதே இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.
குறித்த நபரிடமிருந்து, 9130 மில்லிகிராம் ஹெரோயின், 5990 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள், 6670 மில்லிகிராம் போதை மாத்திரைத்தூள் மற்றும் 4040 மில்லிகிராம் அடையாளம் காணப்படாத போதைப்பொருள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பண்டாரகம மேற்கு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
