Monday, February 2, 2026
HomeMain Newsஇனவாதமற்ற - வளமான நாட்டை உருவாக்குவதே அரசின் நோக்கம்! யாழில் ஜனாதிபதி தெரிவிப்பு

இனவாதமற்ற – வளமான நாட்டை உருவாக்குவதே அரசின் நோக்கம்! யாழில் ஜனாதிபதி தெரிவிப்பு

எந்த மொழியை பேசினாலும் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்து பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய இனவாதமற்ற, தேசிய ஒற்றுமை நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் – இவ்வாறு ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கா தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கல் தினமான நேற்று யாழ்ப்பாணம் வந்த அவர் வேலணை ஐயனார் கோயில் விளையாட்டு மைதானத்தில் நடந்த தைப்பொங்கல் பங்கேற்று உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், தமிழ் மக்களின் முக்கியமானதொரு கலாசார தினமான தைப்பொங்கல் தினத்தில் நீங்கள் திருவிழாவை கொண்டாடும் நிலையில் எனக்கும் உங்களுடன் இணைவதற்கு வாய்ப்புக் கிடைத்தமையை பாக்கியமாகக் கருதுகிறேன். இதேபோன்று இந்து மக்களின் கலாசாரத்துக்கு அமைய இன்றுதான் புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டு பிறப்பதோடு புதிய பிரார்த்தனைகள், எதிர்பார்ப்புகள் உருவாகின்றன. குறிப்பாக, மக்கள் என்றவகையில் உங்களுக்கு ரும் எதிர்பார்ப்புகள் இருக்கும். அதேபோன்று நாடென்ற வகையில் எமக்கு புதிய எதிர்பார்ப்புகள் உள்ளன.

தற்போது இருப்பதைவிட சகல வகையிலும் வளமான செழிப்பான நாட்டை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும். நாம் வளமான நாடு என்று எதனை குறிப்பிடுகிறோம்? பணம் மற்றும் கட்டுமானங்களின் ஊடாக வளம்பெற்ற நாட்டையா அவ்வாறு சொல்கிறோம்? அதனை விட அதிகளவான துறைகளில் வளமான நாட்டை உருவாக்க வேண்டும். நாம் ஆட்சியை ஏற்று ஒரு வருடத்தைவிட சற்று அதிக காலம் சென்றுள்ளது. வரலாற்றில் மிகக் குறைவான இனவாத மோதல்கள் நடந்த – இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த தேசிய ஒற்றுமைக்காக போராடிய வருடம் இது.

ஏனைய காலங்களில் பல்வேறு இடங்களில் இனவாத மோதல்கள், இனவாத போக்குகள் நடந்தன. இனவாதமற்ற தேசிய ஒற்றுமை நிறைந்த வளமான நாடே எமக்குத் தேவை. எங்கு பிறந்தாலும் எந்த மொழி பேசினாலும் எந்த மதத்தை பின்பற்றினாலும் எத்தகைய கலாசார சூழலில் வாழ்ந்தாலும் அனைவருக்கும் எமது நாட்டில் கௌரவமான பிரஜையாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதே எமது அபிலாசை.

இனவாதமற்ற வளமான நாடே எமக்குத் தேவை. எம்மிடையே வேறுபட்ட கலாசாரங்கள் இருக்கின்றன. ஒரு நாடு எவ்வாறு அழகாகும்? மக்கள் மத்தியில் எவ்வாறு நம்பிக்கை கட்டியெழுப்பப்படும்? இந்த அனைத்து கலாசாரங்களினதும் கௌரவம் – மதிப்பு மற்றும் அங்கீகாரம் என்பன மிக முக்கியமானது. நாம் அத்தகைய நாட்டை உருவாக்க வேண்டும். அதுதான் எமது எதிர்பார்ப்பாக உள்ளது.

பொருளாதார ரீதியில் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்ளும் மக்களுக்கு இருப்பதைவிட சிறந்த வாழ்க்கை நிலையை பெற்றுக் கொடுக்க வேண்டும். குறிப்பாக, சிறந்த வீட்டை வழங்குவது சிறந்த கல்வியை வழங்குவது ஆரோக்கியமான – வாழ்வுக்காக சிறந்த சுகாதார சேவையை ஸ்தாபிப்பது விவசாயம், மீன்பிடித்துறை என்பவற்றை முன்னேற்றி சிறந்த வருமான வழியை அமைத்துக் கொடுப்பது இளைஞர் – யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பது போன்றவை அரசாங்கம் என்ற வகையில் எமக்குள்ள எதிர்பார்ப்புகளாகும்.

இங்கிருக்கும் அநேகமானோர் கடந்த பொதுத் தேர்தலில் எம்மீது நம்பிக்கை வைத்து யாழ். மாவட்டத்தை முதன்முறையாக வெற்றி கொள்ள பங்களித்தவர்களாவர். நீங்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை சிறிதளவாவது வீழ்ச்சியடைய இடமளிக்காது இனவாதமற்ற தேசிய ஒற்றுமைமிக்க நாட்டை உருவாக்குவோம்.

உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம். அனைவரும் மகிழ்ச்சியோடும் நிம்மதியோடும் வாழும் நாட்டை நாம் உருவாக்குவோம். இங்கு திரண்டுள்ள மக்களின் பிரதான எதிர்பார்ப்பு அதுதான் என்பதை நாம் அறிவோம். மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக நாம் தயக்கமின்றி எமது பொறுப்பை நிறைவேற்றுவோம். இந்த தைப்பொங்கல் தினத்தில் ஒரு பிரார்த்தனை செய்வோம். நாம் பிரியாதிருப்போம் – நாம் ஒன்றுபடுவோம். சிறந்த நாட்டை எமது மக்களுக்காக உருவாக்குவோம் – அனைவரும் திடஉறுதியுடன் முன்வர வேண்டுமென பிரார்த்திக்கிறேன்” என்றும் தெரிவித்தார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular