
தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை மாலை அனுஷ்டிக்கப்பட்டது.
கடந்த 04.02.1957 ஆண்டு ஸ்ரீலங்காவின் ஒன்பதாவது சுதந்திர தின நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் ஸ்ரீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் கரிநாளாக பகிஷ்கரித்தனர்.
திருமலையில் உயரமாக பறக்கவிடப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய 22 வயது இளைஞரான தியாகி நடராஜன், அரச படைகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
அவர் தேசியக் கொடியுடன் மண்ணில் வீழ்ந்து உயிர்துறந்த நிகழ்வு, அன்றைய தினம் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தையே உலுக்கியது. அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி நடராஜன் படுகொலை செய்யப்பட்டபோது தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனுக்கு அகவை 03 ஆகும்.
இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக ஒன்பதாவது ஆண்டில் அதாவது – 1957, பெப்ரவரி 4ஆம் திகதி முதல் தமிழ்த் தேசிய விடுதலை உணர்வுடன் சிங்கள அரச படைகளின் துப்பாக்கி சூட்டில் பலியான திருகோணமலை மண் தந்த வீரப்புதல்வன் தியாகி நடராஜனின் 69வது ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தாயக நினைவேந்தல் பணிமனையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தாயக நினைவேந்தல் குழுவினர் மற்றும் தமிழ்த் தேசிய பற்றாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தியாகி நடராஜனின் உருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலிசெலுத்தினர்.
