கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண பி குழுவுக்கான கடைசி லீக் போட்டியில் அணித் தலைவர் சிக்கந்தர் ரஸாவின் அதிரடி ஆட்டத்தால் இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது சிம்பாப்வே அணி
இந்தப் போட்டியில் நிதானம், பொறுமை, சிறந்த வியூக அமைப்பு ஆகிய அனைத்தையும் செவ்வனே பிரயோகித்த ஸிம்பாப்வே அணி 3 பந்துகள் மீதம் இருக்க 6 விக்கெட்களால் வெற்றிபெற்று தோல்வி அடையாத அணியாக சுப்பர் 8 சுற்றை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சகலதுறைகளிலும் அபரிமிதமாக பிரகாசித்து வெற்றியீட்டிய இலங்கைக்கு ஸிம்பாப்வேயுடனான தோல்வி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் 2010இல் இலங்கையிடம் தோல்வி அடைந்த ஸிம்பாப்வே இப்போது 16 வருடங்கள் கழித்து ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாறு படைத்தது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது. பத்தும் நிஷங்க மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆரம்ப விக்கெட்டில் 22 ஓட்டங்களைப் பெற்ற குசல் பெரேராவுடன் 54 ஓட்டங்களையும் இரண்டாவது விக்கெட்டில் 14 ஓட்டங்களைப் பெற்ற குசல் மெண்டிஸுடன் 46 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.
அத்துடன் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையை பத்தும் நிஷங்க நிலைநாட்டினார்.
அவர் 88 போட்டிகளில் 2636 ஓட்டங்களைப் பெற்று குசல் மெண்டிஸ் 104 போட்டிகளில் பெற்ற 2607 ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடித்தார். பத்தும் நிஷங்க 8 பவுண்டறிகளுடன் 60 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
மத்திய வரிசையில் பவன் ரத்நாயக்க 44 ஓட்டங்களையும் துனித் வெல்லாலகே ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் க்றேம் க்ரேமர் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ளெசிங் முஸராபனி 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்றட் இவான்ஸ் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
179 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 19.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
ப்றயன் பெனெட், தடிவன்ஷே மாருமணி (34) ஆகிய இருவரும் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஸ்திரமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். மொத்த எண்ணிக்கை 98 ஓட்டங்களாக இருந்தபோது ரெயான் பேர்ல் (23) இரண்டாவதாக ஆட்டம் இழந்தார். ஆனால், ப்றையன் பெனெட், அணித் தலைவர் சிக்கந்தர் ரஸா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் வேகமாக 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு வெற்றியை அண்மிக்கச் செய்தனர்.
19ஆவது ஓவரில் துஷான் ஹேமன்தவின் பந்துவீச்சில் சிக்கந்தர் ரஸா (45), டஷிங்கா முசேக்கிவா (1) ஆகிய இருவரினது மிகவும் கடினமான பிடிகளை தசுன் ஷானக்க எடுத்து ஆட்டம் இழக்கச் செய்தார்.
கடைசி ஓவரில் ஸிம்பாப்வேயின் வெற்றிக்கு 8 ஓட்டங்கள் தேவைப்பட்டது. தீக்ஷன வீசிய 20ஆவது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் ஒன்றை விளாசிய முனியொங்கா அடுத்த பந்தில் ஒற்றையை எடுத்து வெற்றி இலக்கை சமப்படுத்தினார். மூன்றாவது பந்தை ப்றயன் பெனட் பவுண்டறியாக்கி அணியின் வெற்றியை உறுதிசெய்தார். ஆட்டநாயகனாக சிக்கந்தர் ரஸா தெரிவானார்.
